ஜெயஸ்ரீ ஷங்கர்

Monday, May 30, 2016

தினம் ஒரு பழம் உண்போம்...!


இயற்கையோடு இணைந்தது தான் மனிதனின் ஆரோக்கியமான வாழ்வும். ஆமாங்க...இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தும், நாமெல்லாம் இப்போ மின்னுலகத்தின் மயக்கத்தில் இயந்திர மனிதர்களாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொண்டு, ஆரோக்கியத்தை துரித உணவில் துறந்து விட்டு உடலை வியாதிகளின் கூடாரமாக்கி கொண்டு நிற்கின்றோம். இப்போதாவது விழித்துக் கொள்வோம். மின்னுலகில் முன்னோக்கி சென்றாலும் உடலுக்கு உரம் ஏற்ற உணவு பழக்கத்தில் மட்டும் காலத்தின்  பின்னோக்கித் தான் பிரயாணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.மீண்டும் நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர். 

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, என்றும் இளமையோடு இருக்கவும் இயற்கை தரும் உணவு தேன்:
தேனோடு ஆரம்பிக்கும் நமது ஒவ்வொரு நாளும் இனிமையானதும் இளமையானதுமாகவே  தான் இருக்கும்.இது சர்வ நிச்சயம்.

தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். 

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும். 

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

தேனுக்கு அடுத்ததாக....நாம் பாலுக்குச் செல்வோமா? ஆமாங்க...இப்பல்லாம் எங்கெங்க நல்ல பால் கிடைக்குது...அதுவும் பசுவின் பால் கிடைத்தால் அவர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள். இந்த சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் பால்...நாலரைப் பால் என்னும் ஏழரைப் பாலிலிருந்து கொஞ்சம் வெளில வாங்க...அந்தப் பாலை சாப்பிட்டு நோயை அழைப்பதை விட வெந்நீர் எத்தனையோ மேல்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். 

நம் உடலுக்கு இயற்கையாய் நித்தம் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட்டால் போதும்....தேவையான சுண்ணாம்பு சத்து கிடைத்துவிடும். அதுமட்டுமா..நகம், தலைமுடி,கண்கள், எலும்புகள், இவரை செழுமையாகக் காப்பது பால் தாங்க. குழந்தைகளின் ஆரோக்கியம் பாலில் தான் துவக்கம்.தயிரைப் பெருக்கி சாப்பிடுங்கள். நெய்யை உருக்கி சாப்பிடுங்கள். இரவில் எக்காரணம் கொண்டும் தயிர் சாப்பிடாதீர்கள். "ராஜாவானாலும் ராத்திரி தயிர் சாப்பிடக் கூடாது"ன்னு சொல்வார்கள். அதேபோல் நெய்யிலாத உண்டி பாழ். அதனால் நெய்யை நித்தம் ஒரு தேக்கரண்டியாவது உணவில் சேர்த்துக் கொள்தல் வேண்டும். சித்த வைத்தியத்தில் பசுவின் நெய் சேர்க்காத மருந்தே இருக்காது. 

இதோ அடுத்தது தாங்க தேனுக்கும், பாலுக்கும் அடுத்தது.....பழம் தாங்க....! அதிலும் பழத்தில் ராஜ பழங்கள் கூட இருக்குங்க. எளிமையா எல்லாராலும் நித்தம் வாங்கி பயன்பெறும் வகையில் ஒரு அதிசய பழம்...!
எலுமிச்சம் பழம் தாங்க அது. தினம் மூன்று வேலையும் எலுமிச்சம் பழத்தின் சாறு சாப்பிட்டு பாருங்கள்...அப்புறம் சொல்வீங்க......ஆரோக்கியம் எப்படி உங்க கிட்டே திரும்ப வந்து சேர்ந்ததுன்னு. ஆப்பிள் வாங்க பணத்தை  எண்ண வேண்டாம்....பத்து ரூபாயில் கை நிறைய எலுமிச்சம் பழம் வாங்கிண்டு வரலாம்.

நமது உடலின் PH balance ஐ சரியாக வைக்க உதவும் இந்த எலுமிச்சம் பழங்கள் ....தரும் பலன்கள் அபரிதமானது.

நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
கொழுப்பு குறையும்.
மனம் தெளிவுறும் 
புத்தி கூர்மையாகும் 
மன அழுத்தம் குறையும் 
தெய்வீகத் தன்மை கூடும் 
எதிர்மறை எண்ணங்கள் அகலும் 
கண்கள் பளிச்சிடும் 
தோல் நிறம் மாறும் 
உடல் குளிர்ச்சியடையும் 
உடலின் உஷ்ணம் மறையும் 
தலையில் தேய்த்தால் பொடுகு மறையும் 
முகத்தில் அதன் தோலைத் தேய்த்தால் கருமை நிறம் மாறும் 
அசிடிட்டி காணாமல் போகும்.
ரத்தம் சுத்தமாகும் 
இன்னும்...இன்னும்...சொல்லிக்கிட்டே போகலாம்....


இதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கைகொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் …ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யைத் தர நோயை எளிதில் குணமாக்கலாம்.


தினம் காலை எழுந்ததும், ஒரு பெரிய டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தின் சாறெடுத்து அத்தோடு கூட 6 புதினா இலைகளைக் கழுவி நறுக்கி சேர்த்து ஒரு தேக்கரண்டி இஞ்சியின் சாறு கலந்து பருகிப் பாருங்களேன்....நீங்கள் விரும்பும் மாற்றம் உங்கள் உடலோடு ஒட்டிக்கொள்ளும். ஆரோக்கியத்துடன் வாழ இது இறைவன் அளித்த கொடை மூலிகைகள். 

காலை 6 மணிக்கு இஞ்சி, மதியம் 12 மணிக்கு சுக்கு, மாலை 6 மணிக்கு கடுக்காய் தோல் பொடி ....இதை கண்டிப்பாக 48 நாட்கள் உண்டு வந்தால் என்றும் இளமையோடு சுறுசுறுப்பாக வலம் வரலாம். 

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ்சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும்.

இதோ மகத்தான கீரைகள்....!

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். 

கறிவேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும். 

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். 

நித்தம் இரவு படுக்கப் போகும் முன்னே ஒரு பெரிய மாதுளம் பழத்தை உண்ணும் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். மாதுளம் பழத்தை உள்ளிருக்கும் பஞ்சோடு சேர்த்து உண்ண வேண்டும். துவர்ப்பு சத்து உடலில் சேர அதைவிட வேறு எதுவும் இல்லை. ரத்தம் பெருக, சோகை மாற, ஆண்மை பெருக, இதயம் வலுப்பெற....சொல்லிக்கொண்டே போகலாம். பழங்களின் ராணி என்றாலும் மிகையாகாது. மாதுளம்பழ மணப்பாகு வாங்கியும் உபயோகப் படுத்தலாம். கூடுமானவரையில் இயற்கையாய் பழத்தை வாங்கி கடித்து சுவைத்து உண்ணுங்கள். ஒரு பழத்தை அரை மணி நேரமாவது நிதானமாக மென்று ரசித்து உண்ண வேண்டும். பழம் மட்டுமல்ல உங்கள் மன உணர்வையும் சேர்த்து உண்ண வேண்டும். குணம் மாறி இனிமையாகும்.மனிதன் மனிதமாகும் மந்திரம் தான் பழத்தில் ருசியாக உள்ளது.

4 comments: